Monday, February 9, 2009

நல்லவை சில ...

கண்களை நம்பாதே என்கிறார்கள். ஓர் உதாரணத்துடன் விளக்க முடியுமா?

பேரரசர் ஷிரெனிக்கும் அவரது ராணி செலினாவும் உறங்கிக் கொண்டிருந்தனர். அது மழைக்காலம்... கடுமையான குளிர் மிகுந்திருந்தது. பேரரசர் ஆழ்ந்து உறங்கியபோது ராணியின் வாயிலிருந்து, ''அவர் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்?'' என்ற வார்த்தைகள் வந்தன.

பேரரசர் விழித்தார். இந்த வார்த்தைகளைக் கேட்ட அவரது உடலும், ஆவியும் கொதித்தது. அவர் இதுநாள் வரை தனது ராணியின் உயரிய பண்பைப் பற்றிப் பெருமை கொண்டிருந்தார். 'இப்போது ராணி யாரைப் பற்றிப் பேசுகிறார்? அவளுக்கு ரகசிய காதலர் உண்டா? ஓ கடவுளே!' அவர் மனம் பெரும் கொந்தளிப்பில் இருந்தது. ராணி மீதே அவநம்பிக்கை எழுந்தது. காலையில் கோப நிலையில் அரண்மனையில் பொறுப்பான நபரை, ''இந்த அரண்மனையை எந்தத் தாமதமும் இன்றி கொளுத்திவிடு! நான் பகவான் மகாவீரரைப் பார்க்கச் செல்கிறேன்'' என்று புறப்பட்டுப் போனார். பேரரசரின் கட்டளையைக் கேட்டு அதிர்ந்து போனார் பொறுப்பான நபர்.

பேரரசர் ஷிரெனிக், பகவான் மகாவீரரைச் சந்திக்கும் இடத்துக்குச் சென்றார். பகவான் மகாவீரர் அன்றைய பிரசங்கத்தில் கற்பும், பற்றுறுதியும் மிக்க பெண்கள் பற்றிப் பேசினார். தமது பிரசங்கத்தின் இடையில், ''ராணி செலினா கற்பும் பற்றுறுதியுமிக்க பெண்களில் முதன்மையானவர்'' என்று குறிப்பிட்டார். பேரரசரால் நம்ப முடியவில்லை.

இதன்பின் மகாவீரரிடம் நேற்று இரவு நடந்ததைச் சொன்னார் பேரரசர். அதற்கு பகவான் மகாவீரர் சொன்னார்: ''ராணி செலினா நேற்று மாலை தனது வந்தனத்தைத் தெரிவிக்க இங்கு வந்தார். திரும்பும் வழியில் மரத்தினடியில் நின்றவாறு தியானம் செய்த சமணத் துறவியைக் கண்டார். அவர் ஆடையின்றி இருந்தார். அப்போது மிகவும் கடுமையான குளிராக இருந்தது. ராணி அங்கே நிற்கவில்லை. வணங்கிவிட்டு, அவர் தன் வழியே சென்றுவிட்டார்.

ராணி இரவில் தூங்கும்போது அவரது ஒரு கை, கம்பளிப் போர்வைக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. ராணியின் கை உயிரற்றதுபோல மரத்துப் போயிருக்கிறது. 'ஓ, எனது ஒரு கரம் சிறிது நேரம் கடும் குளிரில் ஏறக்குறைய உயிரிழந்து விட்டது. ஆடைகளின்று திறந்தவெளியில் தியானம் செய்யும் துறவியைப் போற்றுகிறேன். அவர் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார் என வியக்கிறேன்' என்று புலம்பி இருக்கிறார்'' என்றார் மகாவீரர்.

இதைக் கேட்டதும் பேரரசர் மதிமயங்கி திகைத்து நின்றார். அவர் உடனே விடைபெற்றுப் புறப்பட்டார். வழியில், அரண்மனைக்குத் தீவைக்குமாறு தான் கட்டளை இட்ட நபரைச் சந்தித்துப் பதற்றத்துடன் அவர் விசாரித்தார். ''என்னுடைய கட்டளையை நிறைவேற்றினாயா?''

''ஆம் பேரரசரே...'' என்றான். பேரரசர் சொன்னார், ''அன்பரே... மாபெரும் அநீதி நிகழ்ந்து விட்டது.''

''நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார் அந்த நபர். பேரரசர் முழுக் கதையையும் சொன்னார். அதன் பின் அவர் சொன்னார்: ''நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் ஆணைப்படி நெருப்பை மூட்டி விட்டிருக்கிறேன். ஆனால் அந்த நெருப்பு அரண்மனையை அடைய ஒரு நாள் ஆகும்.'' பேரரசர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

நமது கண்களும், காதுகளும் கூட நம்மை ஏமாற்றும் வலிமை உடையவை. தீர்க்கமாக ஆராய்ந்து அவசரப்படாமல் முடிவெடுத்தல் அவசியம்.

-------------------------------------

குழந்தைகளை மிகச் சின்ன வயதிலேயே பள்ளிக்கூடம் அனுப்புகிறார்களே... இது சரியா?

ல்வி கற்பது வேறு. பள்ளிக்கு அனுப்புவது வேறு. இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு நம் பெற்றோருக்குப் புரியவில்லை. ஏழு வயதுக்குள் மூளை உள் வாங்கும் விஷயங்கள்தான் வாழ்வின் பெரும்பாலான காலத்துக்குப் பயன்படுவது. எழுபது சதவிகிதச் செய்திகள் அதற்குள் பதிவாகி விடுகின்றன. எஞ்சிய ஆயுள் முழுவதும் மிச்சத்தைத்தான் அவை கற்கின்றன. ஜப்பானில் ஏழு வயது வரை வீட்டில் நிறைய கற்றுத் தந்து, பின்னர் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்று ஒருமுறை படித்தேன். இப்போது கர்ப்பத்திலேயே குழந்தையோடு பேசச் சொல்கிறார்கள். தான் தியானம் பழகி குழந்தைக்கும் (கர்ப்பத்தில்) தியான உணர்வை ஏற்படுத்த முடியும் என்கிறார்கள்.

ஒரு ஞானியைச் சந்தித்த பெண்மணி தன் குழந்தையைக் காட்டி, ''ஐயா... இவனுக்குக் கல்வியை எந்த வயதில் இருந்து தொடங்கலாம்?'' என்று கேட்டார். ஞானியோ, ''குழந்தைக்கு எத்தனை வயது?'' என்று பதில் கேள்வி கேட்டார்.

''மூன்று வயது'' என்றாள் தாய். ஞானியோ, ''ஆஹா... மூன்று வருடங்களை வீணாக்கி விட்டீர்களே... கல்வியில் இவன் மூன்று வருடங்கள் பின்தங்கி விட்டானே'' என்று கவலைப்பட்டாராம். அதாவது உயர்ந்த சிறந்த வாழ்வியல் உண்மைகளைக் கற்க வயதெல்லை கிடையாது.

-------------------------------------
இன்றைய இளைஞர்கள் பெற்றோரை எதிர்த்துப் பேசுகின்றனரே... என்ன செய்வது?

ரசிக்கலாம்; பாராட்டலாம்; பலபேரிடம் சொல்லிச் சொல்லி மகிழலாம். நாம் கூட, நம் அப்பா- அம்மாவை எதிர்த்துப் பேசவே நினைத்தோம். பயத்தால், போலியாக அடக்கிக் கொண்டு மரியாதை காட்டுவது போல் நடித்தோம்.

இன்றைய பிள்ளைகள் கோழைகளாக இல்லை; உண்மையாக இருக்கிறார்கள்! பெற்றோரை எதிர்க்க நினைத்த நமது எண்ணங்களே... நம் வழியே பிள்ளைகளுக்கும் சென்று செயலாக வெளிப்படுகிறது. எனவே, அவர்களை எப்படி நோக முடியும்?

ஒரு சம்பவம்...

அப்பா: 'என்னடா படிக்கிற நீயெல்லாம்? உலகத்தை முதன் முதல்ல சுத்தி வந்தவர் யாருன்னு கேட்டா பதில் சொல்லத் தெரியலியே?

மகன்: என்னை மட்டும் ஊரைச் சுத்திட்டு வர்றேன்னு திட்டுங்க. உலகத்தைச் சுத்திட்டு வந்தவனைப் புகழ்ங்க. உலகத்தைச் சுத்தறவனை விட, ஊரைச் சுத்தறவன் நல்லவன் இல்லியா?

_ இப்படிப் பேசும் மகனை வெறுக்கவா முடியும்? ரசியுங்கள் சார்! மனதார பாராட்டுங்கள். இளைஞர்களுக்கு நம் மீது நட்பும் நம்பிக்கையும் வந்தால்தான் இளைஞர்களை, சரியான பாதையில் செலுத்த முடியும் என்கிற ரகசியத்தைக் கற்றுக் கொள்ளுங்கள் சார்!

------------------------------------------------------------------------------------------------

மருத்துவர்களாகிய எங்களது பேச்சைக் கேட்காமல், தங்களது கருத்திலேயே பிடிவாதமாக நிற்கும் நோயாளிகளின் பேச்சைக் கேட்கும்போது எரிச்சல் வருகிறது. என்ன செய்யலாம்?

நகைச்சுவை உணர்வுடன் வாழப் பழக வேண்டும். சிரிக்கத் தெரிய வேண்டும். அண்மையில் கண் மருத்துவரைப் பார்க்கப் போயிருந்தேன்.

அங்கு நோயாளி ஒருவர், ''டாக்டர் டி.வி. பாக்காம இருக்க முடியலை. கண்ணும் கெடக் கூடாது... டி.வி- யும் பாக்கணும். வழி சொல்லுங்க" என்று மல்லுக்கு நின்றார்.

துளிக்கூட டென்ஷன் ஆகாமல் டாக்டர் சொன்னார்...

''அருமையான வழி இருக்கு. டி.வி-யை ஆஃப் பண்ணிட்டுப் பாருங்க... 24 மணி நேரம் பார்த்தாலும் கண்ணும் கெடாது; டி.வி-யும் ரிப்பேர் ஆகாது" என்றார். இப்படி ஜோக் அடிக்க நீங்களும் பழகிக்கோங்க டாக்டர்... டென்ஷன் இருக்காது.

நான், யாரிடம் பேசினாலும் சண்டையில் போய் முடிகிறது! நியாயத்தைதான் சொல்கிறேன்... எனினும் எவருக்கும் என்னைப் பிடிக்கவில்லை! என்ன செய்வது?

வருடன் பேசுவதாக இருந்தாலும்... 'வாருங்கள் கலந்து பேசுவோம்' என்று உரையாடலுக்குத் தயாராகுங்கள். எதிர் தரப்பினரின் நியாயத்தையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்! 'உரையாடல் என்பது இருவழிப் பாதை; எதிர்ப் பக்கத்தில் இருந்தும் பயணம் அனுமதிக்கப்படுகிறது' என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

மாறாக, விவாதத்துக்கு அழைப்பு விடாதீர்கள். அது சண்டையில் முடியலாம். உரையாடல்- நட்புக்கு வழி வகுக்கும். விவாதம்- பகைமைக்கு வாசல் திறக்கும்!

-----------------------------------------------------------------------------------------------

உங்களை ஆச்சரியப்படுத்தும் விஷயம்?

க்கத்து வீட்டுக்காரன் நாள்தோறும் தன் வீட்டுக் குப்பைகளை, உங்கள் வீட்டின் முன் போட்டால் பொறுத்துக் கொள்வீர்களா? கோபப்படுவீர்கள்; அவனுடன் சண்டைக்குப் போவீர்கள்! ஆனால், அதே பக்கத்து வீட்டுக்காரன் நாள்தோறும் நம்மைச் சந்தித்து, நடிகர்- நடிகைகளின் அந்தரங்கம், ஊர்க் கதை மற்றும் அரசியல் கிசுகிசுக்களைப் பற்றிப் பேசும்போது அருவருப்பு அடைகிறோமா? இல்லை!அவர் என்ன செய்கிறார்? நம் மனதில் குப்பை கொட்டுகிறார். வீட்டில் குப்பை கொட்டினால் கோபப்படும் நாம், மனதில் குப்பை கொட்டுவதை வரவேற்கலாமா?

மனதில் குப்பை கொட்டும் நபரை வரவேற்கக் காத்திருக்கி றோம். வராவிட்டால் ஏங்குகிறோம். கட்டடங்களைக் குப்பை ஆக்குபவர்களைக் கடுமையாக எதிர்க்கும் நாம், மனதைக் குப்பையாக்குபவர்களை விரும்புவது ஏன்?

என்னை ஆச்சரியப்படுத்தும் விஷயம் இதுதான்!

-------------------------------------

வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய விரும்புகிறேன். சுருக்கமாக ஓர் யோசனை சொல்லுங்களேன்...

னியாக இருக்கும்போது உங்களது எண்ணங்களில் கவனமாக இருங்கள்.

உங்களுடன் மற்றொருவரும் இருக்கும் நேரத்தில் எண்ணம் தவிர சொற்களிலும் கவனமாக இருங்கள்.பலரோடு சேர்ந்து இருக்கும் தருணத்தில்... எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் கவனமாக இருக்க வேண்டும். இதைக் கடைப்பிடித்தால் உயர்வு நிச்சயம்!

----------------------------------------------------------------------------------------------

என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன. தப்பிக்க வழி சொல்லுங் களேன்?

ந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை.

அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார்.மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது. நாய்களோ வெறித் தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் ஓஷோ அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.

ஓஷோவை எழுப்பிய அமைச்சர், ''என்ன மனிதர் நீங்கள்... இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?'' என்று புலம்பினார்.

ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்: ''அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை; கோஷமிடவில்லை! பாவம், அந்த நாய்களுக்கு... இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவை, பத்திரிகை படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்!'' என்றார்.

''நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்?'' என்றார் அமைச்சர்.

உடனே ஓஷோ, ''நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள். அப்படிப் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல... உங்கள் எதிர்ப்பு உணர்வு. நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்; இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால்தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை.

நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை. ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான்!

நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன... பார்த்தீர்களா? ஏற்பு உணர்ச்சியுடன் கவனித் தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்!'' என்றார் ஓஷோ.

'உதவாக்கரை யோசனை!' என்று மனதுக்குள் பழித்தபடி போனார் மந்திரி. ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து ஓஷோவைச் சந்தித்தார் அமைச்சர்!

''ஆச்சரியம்தான்! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித் தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்'' என்றார் அமைச்சர்.

ஓஷோ நமக்குச் சொல்கிறார்: ''இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் முகத்தை உள்முகமாகத் திருப்பு. எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய். உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும். அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய். அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம். உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்.

உங்களது கேள்விக்கு, ஓஷோவே பதில் சொல்லி விட்டார். என் மீது எரிச்சல் எதுவும் இல்லையே!

------------------------------------------------------------------------------------------------

எண்ணற்ற திறமைகள் இருந்தும் உலகமே எனக்கு எதிராக இருப்பது போல் உணர்கிறேன். இதைத் தவிர்க்க என்ன வழி?

ங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் ஆர்தர்கார்டன் எழுதிய ஒரு வாக்கியம்:

'சிறு மெழுகுவத்தியின் வெளிச்சத்தைக்கூட மறைக்கும்
இருட்டு, இந்த உலகத்தில் இல்லவே இல்லை!'

நீங்கள் எரியும் மெழுகுவத்தியாக இருந்தால், எந்த இருட்டும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது!

-------------------------------------

நான் ஓர் ஆசிரியர். இன்றைய மாணவர்கள் பலர் படிப்பில் ஆர்வமே காட்டுவதில்லை... எப்படி பாடம் நடத்துவது?

பாடம் தவிரவும் பல விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். மாணவர்களுக்குச் சுவையாகவும் கற்பனையாகவும் விதவிதமான முறையில் பாடம் நடத்த வேண்டும்.

எங்கள் ஆங்கில ஆசிரியர் ஒருவர் அவரது பாட வேளையில், வார்த்தை விளையாட்டு நடத்துவார். ஒருமுறை எங்கள் வகுப்பில், 'ABCD இந்த எழுத்துகள் இடம்பெறாத நூறு ஆங்கில வார்த்தைகளைச் சொல்ல முடியுமா?' என்று கேட்டார்.

நாங்கள் தடுமாறினோம். முடிவில்... ''நீங்களே சொல்லுங்கள் சார்'' என்று அவரிடமே கேட்டோம்.

''நீங்கள் நூறு எண்ணுவதற்குள் நான் சொல்லி விடுவேன்!'' என்று சவால் விட்டவர், 'ஒன், டூ, த்ரீ...' என்று வரிசையாகச் சொல்லச் சொன்னார். 99 வரும் வரை பேசாமல் இருந்தவர், Ninty Nine-என்று நாங்கள் சொன்னதும், 'Stop' என்றார்.

பிறகு, ''Stop என்ற வார்த்தையுடன் சேர்த்து நூறு வார்த்தைகள் ABCD வராமல் சொல்லி விட்டேன்... பார்த்தீர்களா!'' என்று திகைக்க வைத்தார். உண்மைதான்! 1 முதல் 99 வரை ஆங்கிலத்தில் சொல்லும்போது ABCD எதிலுமே வராது. அவரது வகுப்பு என்றாலே ஆசையாகக் காத்திருப்போம். இப்படி நீங்களும் ஏதாவது ஓர் யுக்தியை தினம் தினம் கையாள வேண்டும்.

திருமதி. ஒய்.ஜி.பி. மிகச் சிறந்த பள்ளிகளின் நிர்வாகி; கல்வித் துறை நிபுணர். ஒருமுறை அவர் சொன்னார்: ''ஷேக்ஸ்பியர் நாடகம் பாடம் நடத்தினோம். பசங்க ஆர்வமா இல்லை. கவனமா படிக்கலை. உடனே, 'இந்த டிராமாவை தமிழில் சினிமாவா எடுத்தா, எந்தெந்த வேடத்துக்கு யார் யாரை நடிகரா போடலாம்... ஏன்? அவர்களுக்கும் அந்தப் பாத்திரத்துக்கும் எப்படி பொருத்தம்?'னு எழுதச் சொல்லி அசைன்மெண்ட் கொடுத்தோம். பிள்ளைகள் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்தார்கள். பாடமும் சுபமாக நடத்தப்பட்டது!'' _ இது நல்ல யுக்திதானே!

-------------------------------------

உன்முன் தலை குனிந்தேன் - அதனால்,
பலர்முன் தலை நிமிர்ந்தேன்.
நன்றி புத்தகமே நன்றி.

-------------------------------------

பல பேர், அடிக்கடி சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்களே... என்ன காரணம்?

அவன் ஒரு பைத்தியம். பாதாளச் சாக்கடையின் மூடியின் மீது நின்றபடி, ''ஐம்பத்திநான்கு... ஐம்பத்திநான்கு'' என்றபடி குதித்துக் கொண்டிருந்தான்.

அந்த வழியாக வந்த மனிதர் ஒருவருக்கு, இவனது செய்கை வேடிக்கையாகத் தோன்றியது. மெள்ள அருகில் சென்றவர், ''அது என்ன... ஐம்பத்து நான்கு ஐம்பத்துநான்குன்னு சொல்லிக்கிட்டே குதிக்கிறே?'' எனக் கேட்டார்.

''அதைப் பத்திச் சொல்லணும்னா... நீங்களும் இந்த மூடி மேல் ஏறி குதிக்கணும்!'' என்றது பைத்தியம்.

இவன் பைத்தியம் என்பது தெரியாத அந்த ஆசாமியும் ஆர்வத்துடன் மூடியின் மேல் ஏறி நின்றார். அவ்வளவுதான்! 'லபக்'கென்று மூடியை உருவியது பைத்தியம். பாவம்... அந்த மனிதர் நிலைகுலைந்து பாதாள சாக்கடைக்குள் விழுந்தார்.

பிறகு, சாவதானமாக மூடியைப் போட்டு மூடி விட்டு, அதன் மீது ஏறி நின்ற பைத்தியம், ''ஐம்பத்தி ஐந்து... ஆஹா... ஐம்பத்தி ஐந்து'' என்று குதிக்க ஆரம்பித்தது!

அளவுக்கு அதிகமான ஆர்வத்தால் தூண்டப்பட்டு, தனக்குச் சம்பந்தமே இல்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பவர்கள் அதிக சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள். 'எவன் எவ்வளவு கத்தினால் என்ன?' என்று விழிப்பு உணர்வுடன் கடந்து போகிறவர்கள், சிக்கல்களைக் கடந்து விடுகிறார்கள்.

-------------------------------------

இந்தியாவில் விவாகரத்து அதிகமாகி வருகிறதே... சென்ற தலைமுறை இப்படியா இருந்தது?

அண்மையில் இளைஞர் ஒருவர் என்னை சந்தித்தார். முப்பது வயதாகியும் தமக்குத் திருமணம் ஆகவில்லை என்றும், பார்க்கும் பெண்களை எல்லாம் தன் தாயார் நிராகரிப்பதாகவும் கூறி வருந்தினார்; வெவ்வேறு குற்றம்- குறைகள் சொல்வதாக வேதனைப்பட்டார்.

''இந்தப் பிரச்னை தீருவதற்கு ஒரே வழி... உங்கள் அம்மாவைப் போன்ற ஒரு பெண்ணை நீங்கள் தேர்ந்தெடுப்பதுதான். தோற்றம், நடை- உடை பாவனை, நிறம், சமையல் உட்பட எல்லா விஷயங்களிலும் உங்களின் அம்மாவை மாதிரியே உள்ள ஒரு பெண்ணை, அம்மா வழி உறவிலிருந்தே தேர்ந்தெடுங்கள். உங்கள் அம்மா இசையக் கூடும்'' என்றேன்.

இரண்டே மாதத்தில் வெகு குஷியாக வந்த இளைஞர், ''அச்சு அசல் அம்மா மாதிரியே இருக்கிற பெண் கிடைத்து விட்டாள்.
அம்மாவும் இணங்கி விட்டார். விரைவில் நிச்சயதார்த்தம்!'' என்று பூரித்தார்.

ஆனால் அது நிறைவேறவில்லை என்று சில நாட்கள் கழித்து எனக்குத் தகவல் கிடைத்தது. மீண்டும் அந்த இளைஞனைச் சந்தித்தபோது, 'காரணம் என்ன?' எனக் கேட்டேன்.

'அவள் உன் அம்மா மாதிரியே இருக்கிறாள். முப்பதாண்டுகளாக உன் அம்மாவோடு நான் பட்ட அவஸ்தை போதாதா? உன்னை அப்படியரு ஆபத்தில் சிக்க விட மாட்டேன்!' என்று அவனின் அப்பா மறுத்து விட்டதாகக் கூறினான்.

சென்ற தலைமுறையில் எரிமலை புகைந்தது. இந்தத் தலை முறையில் எரிமலை வெடிக்கிறது!

-------------------------------------

Thursday, January 29, 2009

புளி உப்புமா

தேவையானவை:

அரிசி மாவு - 3/4 ஆழாக்கு (2 கப்)
புளி - 1 சின்ன உருண்டை
தண்ணீர் - 2 கப் (நார்மல் சைஸ்)
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
உப்பு - முக்கால் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 3

செய்முறை :

அரிசிமாவை புளிதண்ணீரில் உப்பு போட்டு கரைத்துவைத்துக் கொள்ளவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு காயந்தவுடன் கடுகு, மிளகாய், உளுத்தம்பருப்பு, மஞ்சள்பொடி, பெருங்காயம் இவற்றை வறுத்துக்கொண்டு கரைத்த மாவை விட்டு நன்றாகக் கிளறவும். கருவேப்பிலை போடவும். பக்கங்களில் ஒட்டாமல் வெந்தவுடன் கீழே எடுத்து வைக்கவும் .

Wednesday, January 28, 2009

ஹோட்டல் சாம்பார் பொடி

தேவையானவை :
சீரகம் - 2 டீஸ்பூன்
வெந்தாயம் - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன்
தனியா - 4 டீஸ்பூன்
மிளகாய் - 10
பொட்டுக்கடலை - 50 கிராம்ஸ்
டோமடோ - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
தேங்காய் - 1/4 மூடி
நார்மல் சாம்பார் பொடி - 2 () 3

செய்முறை:
மேற்கண்ட சாமான்கள் சேர்த்து நார்மல் சாம்பார் பொடி 2 () 3 ஸ்பூன் போட்டு நீர் விட்டு கரைக்கவும். கடுகு, கருவேப்பிலை தாளித்து அரைத்து விழுதை போட்டு லேசாக வதக்கி, நிறைய நீர் விட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியில் பச்சை கொத்தமல்லி சேர்க்கவும் .

முக்கிய குறிப்பு: புளி மற்றும் பருப்பு சேர்க்க தேவை இல்லை.

Wednesday, January 21, 2009

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில...

குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன?

*கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

*குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே" என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்" என்று சொல்ல நேரிடலாம்.

*தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

*சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்" போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

*சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே" என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்" என்று மிரட்டும்.

*குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே" போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

* குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்" என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

*குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

*உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

*படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்" என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்" என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

*குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

ஆபிசில் உங்களை பற்றி "கிசுகிசு' வராமல் இருக்க என்ன செய்வது?

* உங்களைப் பற்றி ஆபிசில் "கிசுகிசு' எழுவதற்கு, உங்களை அறியாமலேயே, நீங்கள ஏதாவது ஒருவகையில் காரணமாகி விட்டீர்களா என்று சுயபரிசோதனை செய்யுங்கள். எடுத்துக் காட்டாக, நம்மிடம் நன்றாகப் பேசுகிறார்களே என்று, குறிப்பிட்ட சிலநபர்களிடம் மட்டும் நீங்கள் சிரித்துப் பேசிபழகியிருந்தால், அவர்களிடம் மட்டுமின்றி, மற்றவர்களிடமும் அதே போன்று பேசுங்கள்; அல்லது உங்களிடம் அதிகம்பேசுபவர்களைத் தவிருங்கள்.

* ஆபிசில் இருக்கும் போது, உங்களது சொந்த மொபைல்போனே என்றாலும், அதிகம்பேசுவதை தவிருங்கள். இதனாலும், உங்கள் பெயர் ரிப்பேர் ஆகலாம்.

* உடன் பணியாற்றுபவர்களில், ஒரு சிலரை அப்பா மாதிரி, அண்ணன் மாதிரி என்று, நீங்கள் நினைத்துக் கொண்டுசகஜமாகப் பழகுவதை, சம்பந்தப்பட்ட நபர்களே கூட, வேறு விதமாகப் பரப்பலாம். எனவே, ஆபிசில் இந்த மாதிரியானஉறவு முறை கொண்டாடுவதை தவிருங்கள்.

* உடன் பணிபுரியும் ஆண்களிடம் பேசுவதில் தவறில்லை; ஆனால், பேசுவதற்கான எல்லையை சரியாக வகுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, உங்கள் குடும்ப விஷயங்களைப் பற்றி அவர்களிடம் கூறாதீர்கள்; அதே போல், அவர்களின் குடும்ப விஷயத்திலும் அக்கறை காட்டாமல் இருப்பது நல்லது. உங்கள் இரக்க சுபாவத்தை தேவையற்றவிதத்தில் பயன்படுத்துவதை அறவே தவிருங்கள். இல்லாவிடில், அது உங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றக் கூடும்என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* நீங்கள் பேசும் நபரின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். இப்படி கண்களைப் பார்த்து பேசுவதன் மூலம், அவர் உள்ளத்து அசைவுகளை ஸ்கேன் செய்ய முடியும். அதன்மூலம், நீங்கள் பேசும் நபர் நல்லவர்தானா, உங்களைப்பற்றிய அவரது எண்ணம் நல்லது தானா என்பதை அறிய முடியும். அதற்கு ஏற்றவாறு நீங்களும் நடந்து கொள்ளலாம்.

* உடன் பணிபுரியும் ஆண்களால் ஏற்படும், பாலியல் தொடர்பான பிரச்னைகளை முடிந்த வரை நீங்களே சமாளிக்கமுயலுங்கள். பிரச்னை, குறிப்பிட்ட எல்லையை தாண்டும் போது, உயரதிகாரியிடம் புகார் செய்ய தயங்காதீர்கள்.

* ஆபாசமாக பேசுவது, பாட்டு பாடுவது, அருவருக்கத்தக்க அல்லது விரும்பத்தகாத புத்தகம் அல்லது படங்களைகொடுப்பது போன்றவையும் பாலியல் தொந்தரவுகளே. எனவே, இதுகுறித்து கவனமாக இருங்கள். உங்களிடம் இப்படியாராவது நடந்து கொள்வதாக தெரிந்தால், அவர்களிடம் இருந்து எச்சரிக்கையுடன் விலகி இருங்கள்.

* உடன் பணியாற்றும் ஆண்களிடம் கண்களால் பேசாதீர்கள். "எக்குத்தப்பான' அர்த்தமாகிப் போகும். இப்படி எல்லாம்நீங்கள் இருந்தும், உங்கள் பெயர் ரிப்பேரா? டோன்ட் கேர்... டேக் இட் ஈஸி! என்று உங்கள் பணியை தொடருங்கள்.

* இது போன்ற பிரச்னைகள் பெண்களுக்கு மட்டும் தான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. பெண்களின் சில தவறான அணுகுமுறை தான் ஆண்கள் இப்படி நடந்து கொள்வதற்கு காரணம் என்று ஆண்கள் சொல்கின்றனர்.

அப்படிப்பட்ட பெண்ணாக நீங்கள் இருந்து விட்டால், அதனால் எழும் பிரச்னைகளை நீங்கள் தனி ஆளாக சந்திக்கவேண்டி வரும். உஷார்!

மூளையே முழிச்சுக்கோ!

மூளை, மனம் என்ற சித்தாந்தத்துடன் சம்பந்தப்பட்ட. மருந்து, மாத்திரைகளைவிடவும் மனோரீதியான அணுகுமுறைகள் மூலமாக மூளையை ஆரோக்கியப்படத்துவதுதான் சாத்தியம்.... அழகு!

* ஒரு மனிதனின் மூளை ஆரோக்கியத்தோடு இருப்பதற்கான விதை, அவன் கருவுக்குள் இருக்கும்போதே போடப்பட வேண்டும். அந்த வகையில் கருவுற்ற பெண்களின் உடல், மன ஆரோக்கியம் மிக மிக முக்கியம்.

* பிறந்ததும் குழந்தை அழுதுவிட்டாலே, மூளை இயங்கத் தொடங்கிவிட்டது என்று அர்த்தம். உரிய காலத்தில் தவழுதல், நடத்தல் ஆகியவை நடக்காவிட்டால் முதல் உதவிக்கு நாட வேண்டியது "நியூரோ' சம்பந்தப்பட்ட மருத்துவரைத்தான்!

* வலிப்பு நோய், பக்கவாதம் ஆகியவை மட்டுமல்ல... அடிக்கடி வருகிற தலைவலியும்கூட சில சமயங்களில் மூளையில் ஏற்படும் பிரச்னைக்கான அலாரம்தான். தொடர் தலைவலி என்றால் தவறாமல் டாக்டரிடம் காட்டிவிடுங்கள்!

* ஞாபக மறதி அன்றாட வாழ்க்கையின் நடைமுறைகளைப் பாதிக்கிற அளவுக்குப் போனால் உஷாராகிவிடுவது உத்தமம். அடுத்தவர்களால் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிற அளவுக்கான ஞாபக மறதி என்பது மூளையில் ஏற்படும் ஏதோவொரு ரிப்பேரின் விளைவுதான்!

* மூளை தொடர்பான எந்த வியாதியாக இருந்தாலும் டாக்டரின் சிகிச்சையைவிட நாம் ஏற்படுத்திக் கொள்ளும் சூழல் மிக முக்கியம். கோப-தாபங்களிலிருந்து விலகியிருக்கப் பழக வேண்டும், பொறாமை, பேராசை, வன்மம் போன்ற நெகட்டிவ் உணர்வுகளை அண்டவே விடக்கூடாது!

* சிறுகட்டி தவறி விழுவதால் ஏற்படும் தலைக்காயம் போன்றவற்றை மருந்து போட்டு மறந்துவிவது சரியல்ல. தலையில் ஏற்படுகிற சிறு காயம் - உடனே தன் விளைவைக் காட்டாமல் பல வருடங்கள் கழித்து பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது என்பதை உணருங்கள்!

* அளவுக்கு மீறிய மன உளைச்சல் மொத்தமாக நரம்பு மண்டலத்தையும் ரத்த ஓட்டத்தையும் காவு வாங்கக்கூடியது. முறையான உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் உளைச்சலில் இருந்து ஓய்வு கொடுக்கும். நடப்பது நடந்தே தீரும் என்ற தத்துவார்த்த அணுகுமுறையை விழிப்பு உணர்வோடு கடைப்பிடிக்க ஆரம்பித்தால் பிரச்னைகளைப் பதறாமல் அணுக முடியும்!

* கூடுமானவரையில் பிரச்னைகளைத் தொலைபேசி மூலம் தீர்த்துக்கொள்ள முனையாதீர்கள். வெறும் குரல்கள் எப்போதுமே நம் மனப்பாங்கை எதிராளிக்கு முழுமையாகக் காட்டாது. தவறான புரிந்து கொள்ளுதலால் பரஸ்பரம் எரிச்சலும் விரக்தியும் அதிகமாகிப் போகும். மூளை சூடேறி வரிசையாகப் பல விளைவுகளை நம் உடலில் காட்டும்.

* சுறுசுறுப்பாக வேலை பார்த்துவிட்டு ஓய்வு பெற்றவர்களை, "போதும் உழைச்சது, சும்மா உட்கார்ந்து நிம்மதியா ரெஸ்ட் எடுங்க" என்று முடக்கிப் போடக்கூடாது. "சும்மா" என்பது மூளையைப் பொறுத்தவரை சைத்தான். எதிர்மறையான விஷயங்களை மட்டுமே நினைக்க வைத்து, அதிலேயே மூழ்கடித்து, பல மன வக்கிரங்களுக்கும் உடல் உபாதைகளுக்கும் வெற்றிலைத் தாம்பூலம் வைத்துவிடும்!

* ஓய்வு பெற்றாலும் பிஸியாகவே இருந்தாலும் ஒவ்வொரு மனிதனும் தன் மன அமைதிக்கு ஏற்ற புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். புத்தகங்களைப் போல் ஒரு நல்ல நண்பன் மூளைக்குக் கிடைக்கவே முடியாது. ஆன்மிக நாட்டம் கொண்டவர்களுக்கு அது தொடர்பான புத்தகங்கள் மிகப் பெரிய வரப்பிரசாதம்!

Tuesday, January 20, 2009

பூண்டு மிளகாய் பொடி

தேவையானவை :
பூண்டு - 10 பல்
காய்ந்த
மிளகாய் - 1 கப் (100 கிராம்)
உளுத்தம்
பருப்பு - 100 கிராம் (தோல் () தோலில்லாமல்)

உப்பு

செய்முறை
:
உளுத்தம் பருப்பு சிவக்கும் வரை 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் / refined oil சேர்த்து வறுக்கவும். பின்பு மிளகாய் வற்றலை (கருக்காமல்) 3 () 4 நிமடங்கள் வறுக்கவும். 1 டீஸ்பூன் உப்பு, தடிய பூண்டு மற்றும் வருத்த சாமான்களைச் சேர்த்து விறுவிறுவென்று பொடிக்க வேண்டும்.

குறிப்பு: இந்த கலவையை (அளவுகளைக் குறைத்து) தண்ணீர் சேர்த்து சட்னி போல அரைக்கவும்.