எந்த சின்ன விஷயமும் நமக்கு ஓர் நெருக்கடியாகி விடுகிறது.
வாழ்க்கையில் எல்லாமே நமக்கு எதிராக இருப்பதைப்போல
எண்ணத் தொடங்குகிறோம். கொஞ்சம் நிதானமாக
யோசித்தால்,நாம் பெரிதுபடுத்திய பல விஷயங்கள் அற்ப விஷயங்கள்
என்பது புலனாகும். எதையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டால்
வாழ்க்கை எளிமையாகி விடுகிறது. கவனம் செலுத்த வேண்டிய முக்கிய
விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்ற மனோபாவம் வந்து வெற்றிப் பாதையை அமைத்துக்கொடுத்து விடும்.
சின்ன விஷயங்களைச் சின்ன விஷயங்களாக நாம் பார்க்க முடியாதபோது
இனிய உறவுகளைக்கூட அவை பாதித்து விடுகின்றன. நாம் சிறு விஷயங்களை அலட்சியப்படுத்தத்
தொடங்கிவிட்டால், அவை சக்தி இழந்து செயலற்றுப் போய் விடுகின்றன. யோசித்துப் பார்த்தால்
எல்லாமே சின்ன விஷயங்கள்தான்.ஒரு விஷயத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம்
என்பதைப் பொறுத்தே அதன் தன்மையும் அமையும். எல்லாவற்றுக்கும் நம்முடைய மனம்தான் காரணம்.
வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல இடர்ப்பாடுகளுக்கும் நம்முடைய தவறான மனோபாவங்களே காரணமாகின்றன.
சாதிக்க வேண்டுமென்றால் ...
மன அமைதியே மனித ஆற்றலின் ஊற்றுக் கண்ணாகவும் விளங்குகிறது. அமைதி நிலையில்தான்
ஆற்றலை முழுமையாக ஒருமுகப்படுத்தவும் முடியும். எனவே, மன அமைதிக்கு முதலிடம் கொடுங்கள்.
சாதனைகள் தாமாகவே தொடரும்.
பிறருடன் பேசும்போது...
ஒருவருடன் பேச ஆரம்பிக்கும்போது, அவர் பேசுவதை முழுமையாகக் கேட்பது என்று முடிவு செய்து
கொள்ளுங்கள். குறுக்கிட வேண்டும் என்று தோன்றினாலும் குறுக்கிடாதீர்கள்.அவர் சொல்வதை நீங்கள்
முழுமையாகக் கேட்ட பிறகு, நீங்கள் என்ன சொல்ல வேண்டுமென்பதைத் தீர்மானித்துத் தெளிவாகப் பேசுங்க.
இதைக் கடைபிடிக்க ஆரம்பித்தால் கருத்துப் பரிமாற்றம் எளிதாகும். மற்றவர்கள் அன்பும் சுலபமாகக் கிடைக்கும்.
மற்றவர்களை நீங்கள் பேச அனுமதித்து அக்கறையுடன் கவனிக்கின்றபோது, நீங்கள் சொல்வதையும் கவனிக்க
வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கும் தானாகவே ஏற்பட்டு விடும்.
குப்பை எண்ணங்கள் வேண்டாமே !
எதிர்மறையான, பலவீனமான எண்ணங்கள் மன அமைதியைத் தகர்த்து சீர்குலையச் செய்யும் சக்தி
படைத்தவை. இதுபோன்ற எண்ணங்கள் குமுறிக் கொப்பளிக்கிறபோது அசாத்தியமான மனஇறுக்கத்தை
நீங்கள் அசைபோடுகின்றபோது எவ்வளவு மோசமான மனநிலைக்கு ஆளாகி இருக்கிறீர்கள் என்பதையும்
எண்ணிப் பாருங்கள்.
ஒரு எதிர்மறை எண்ணம் இன்னொரு எதிர்மறை எண்ணத்துக்கு உங்களை இட்டுச் சொல்கிறது. விளைவாக
குழப்பமான போராட்டத்தை மிக்க மனநிலைக்கு நீங்கள் ஆளாகிப் போகிறீர்கள்.
இதுபோல் எதிர்மறை எண்ணம் என்கிற குப்பை தொடர்ந்து மனதுக்குள் சேர ஆரம்பிக்கிறது. விளைவு என்ன ?
மனம் கவலை களும் வேதனைகளும் நிரம்பிய குப்பைத் தொட்டியாகி விடுகிறது. எதிர்மறை எண்ணங்கள்
அல்லது கவலைகள் மனத்தில் வேகம் பெறுவதற்கு அனுமதிக்காதீர்கள். பிரச்னைகளுக்குத் தீர்வு
கிடைப்பதற்குப் பதிலாக, பிரச்னைகள் பற்றிய கவலைகளே அதிகமாகி மனத்தில் பாரம் அதிகரித்து விடுகிறது.
யார் சரி ? யார் சரியில்லை ?
எப்போதுமே நீங்கள் நினைப்பது சரியாகவே இருக்கும் என நிரூபிப்பது அவசியமா ? - என்கிற இரண்டு நிலைகளில்
ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அவசியம். பல சந்தர்ப்பங்களில் இரண்டும் ஒரே சமயத்தில் நடப்பதில்லை. நம்முடைய
அளவுகோல்களை வைத்துக் கொண்டு மற்றவர்களைத் திருத்துகின்ற வேலையில் நாம் ஈடுபட வேண்டிய
அவசியமில்லை. மற்றவர்கள் அபிப்ராயங்கள் நம்மைப் பாதிக்காதவரை அதை மறுக்க வேண்டிய அவசியமில்லை.
அந்த நிலை மற்றவர்களுக்கு சந்தோஷத்தை அளிக்குமானால், அதைக் கெடுக்காமல் அந்த சந்தோஷத்தில் நாமும்
பங்கு பெறலாம்.
விரும்புவது கிடைக்காவிட்டால்..
நாம் விரும்பியது கிடைக்காமல் போகும் சந்தர்ப்பங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக அதையே நினைத்துக்
கொண்டு வாழ்க்கையை வீணாக்கி விடவும் முடியாது. எது கிடைக்கிறதோ, அதை விரும்ப கற்றுக் கொள்ள
வேண்டும். விரும்புகின்றபடியே எல்லாம் நடக்காது என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு நமக்குக் கிடைத்ததை
விரும்புகின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் வாழ்க்கை இலகுவாகி விடும்.
பிறர் விஷயத்தில் பொறுமை..
நாம் விரும்புகின்ற விஷயங்களே நம்மைச் சுற்றி நிகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு நமக்கு என்ன உரிமை
இருக்கிறது ? இருப்பதை அல்லது நடப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டால் பொறுமையினை இழக்க வேண்டிய
அவசியமே இருக்காது. சுலபத்தில் கோபப்படுகிறோம், வெறுப்படைகிறோம். இது தேவைதானா என்று சில வினாடிகள்
யோசித்துப் பார்த்தால், எவ்வளவு அற்பமான காரியங்களுக்கெல்லாம் நாம் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறோம் என்பது
புரியும்.பொறுமை இல்லாமல் போனால் வாழ்க்கையே ஏமாற்றம் நிறைந்ததாகி விடும்.
மற்றவர்களின் செயல்களைக் கண்டு பொறுமை இழக்காதீர்கள். அவர்கள் செய்வது அறியாமையின் விளைவு என்று
நீங்கள் நினைத்தால், பொறுமை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது.
எங்கே இருக்கிறது திருப்தி ?
""திருப்தி என்பது என்ன ? பணத்தால் திருப்தி ஏற்பட்டு விடுமா...? பத்தாயிரம் ரூபாய் கையிலிருந்தால், இருபதாயிரம்
ரூபாய் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். ஒரு வீடு சொந்தமாக இருந்தால், இன்னொரு வீடு எப்போது
வாங்கலாம் என்கிற ஆசை பிறக்கும். இல்லாவிட்டால் இந்த வீட்டை மேலும் விரிவுபடுத்தலாம் என்கிற ஆசை
பிறக்கும். எல்லா வசதிகளுமே இப்படித்தான். திருப்தி என்பது தொடுவானம் போன்றது. நெருங்க நெருங்க தூர
விலகிச் சென்று கொண்டே இருக்கும்.
மற்றவர்களைத் திருத்துவதா ?
ஒவ்வொருவரையும் திருத்திக் கொண்டிருப்பது நம்முடைய வேலை அல்ல. அது சாத்தியமுமில்லை. நம்முடைய
நேரம்தான் வீணாகும். நம்முடைய குறைபாடுகளே நிறைய இருக்கும்போது, அவற்றை திருத்திக்கொள்ள
முயற்சிக்காமல் மற்றவர்களை விமர்சிப்பது வீண்வேலை.
Excellent post, if every one us try to follow the above, we all shall live in perfect harmony and peace.
ReplyDelete-keep posting such good stuffs.
Sridharan