Saturday, May 9, 2009

இனிய உறவுக்கு 8 டிப்ஸ்


எந்த சின்ன விஷயமும் நமக்கு ஓர் நெருக்கடியாகி விடுகிறது.
வாழ்க்கையில் எல்லாமே நமக்கு எதிராக இருப்பதைப்போல 
எண்ணத் தொடங்குகிறோம். கொஞ்சம் நிதானமாக 
யோசித்தால்,நாம் பெரிதுபடுத்திய பல விஷயங்கள் அற்ப விஷயங்கள்
என்பது புலனாகும். எதையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டால் 
வாழ்க்கை எளிமையாகி விடுகிறது. கவனம் செலுத்த வேண்டிய முக்கிய 
விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்ற மனோபாவம் வந்து வெற்றிப் பாதையை அமைத்துக்கொடுத்து விடும்.

சின்ன விஷயங்களைச் சின்ன விஷயங்களாக நாம் பார்க்க முடியாதபோது 
இனிய உறவுகளைக்கூட அவை பாதித்து விடுகின்றன. நாம் சிறு விஷயங்களை அலட்சியப்படுத்தத் 
தொடங்கிவிட்டால், அவை சக்தி இழந்து செயலற்றுப் போய் விடுகின்றன. யோசித்துப் பார்த்தால்
எல்லாமே சின்ன விஷயங்கள்தான்.ஒரு விஷயத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் 
என்பதைப் பொறுத்தே அதன் தன்மையும் அமையும். எல்லாவற்றுக்கும் நம்முடைய மனம்தான் காரணம்.
வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல இடர்ப்பாடுகளுக்கும் நம்முடைய தவறான மனோபாவங்களே காரணமாகின்றன. 

சாதிக்க வேண்டுமென்றால் ...

மன அமைதியே மனித ஆற்றலின் ஊற்றுக் கண்ணாகவும் விளங்குகிறது. அமைதி நிலையில்தான் 
ஆற்றலை முழுமையாக ஒருமுகப்படுத்தவும் முடியும். எனவே, மன அமைதிக்கு முதலிடம் கொடுங்கள்.
சாதனைகள் தாமாகவே தொடரும். 

பிறருடன் பேசும்போது...

ஒருவருடன் பேச ஆரம்பிக்கும்போது, அவர் பேசுவதை முழுமையாகக் கேட்பது என்று முடிவு செய்து
கொள்ளுங்கள். குறுக்கிட வேண்டும் என்று தோன்றினாலும் குறுக்கிடாதீர்கள்.அவர் சொல்வதை நீங்கள் 
முழுமையாகக் கேட்ட பிறகு, நீங்கள் என்ன சொல்ல வேண்டுமென்பதைத் தீர்மானித்துத் தெளிவாகப் பேசுங்க. 
இதைக் கடைபிடிக்க ஆரம்பித்தால் கருத்துப் பரிமாற்றம் எளிதாகும். மற்றவர்கள் அன்பும் சுலபமாகக் கிடைக்கும்.
மற்றவர்களை நீங்கள் பேச அனுமதித்து அக்கறையுடன் கவனிக்கின்றபோது, நீங்கள் சொல்வதையும் கவனிக்க 
வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கும் தானாகவே ஏற்பட்டு விடும்.

குப்பை எண்ணங்கள் வேண்டாமே ! 

எதிர்மறையான, பலவீனமான எண்ணங்கள் மன அமைதியைத் தகர்த்து சீர்குலையச் செய்யும் சக்தி 
படைத்தவை. இதுபோன்ற எண்ணங்கள் குமுறிக் கொப்பளிக்கிறபோது அசாத்தியமான மனஇறுக்கத்தை
நீங்கள் அசைபோடுகின்றபோது எவ்வளவு மோசமான மனநிலைக்கு ஆளாகி இருக்கிறீர்கள் என்பதையும் 
எண்ணிப் பாருங்கள்.

ஒரு எதிர்மறை எண்ணம் இன்னொரு எதிர்மறை எண்ணத்துக்கு உங்களை இட்டுச் சொல்கிறது. விளைவாக
குழப்பமான போராட்டத்தை மிக்க மனநிலைக்கு நீங்கள் ஆளாகிப் போகிறீர்கள். 

இதுபோல் எதிர்மறை எண்ணம் என்கிற குப்பை தொடர்ந்து மனதுக்குள் சேர ஆரம்பிக்கிறது. விளைவு என்ன ?
மனம் கவலை களும் வேதனைகளும் நிரம்பிய குப்பைத் தொட்டியாகி விடுகிறது. எதிர்மறை எண்ணங்கள்
அல்லது கவலைகள் மனத்தில் வேகம் பெறுவதற்கு அனுமதிக்காதீர்கள். பிரச்னைகளுக்குத் தீர்வு 
கிடைப்பதற்குப் பதிலாக, பிரச்னைகள் பற்றிய கவலைகளே அதிகமாகி மனத்தில் பாரம் அதிகரித்து விடுகிறது. 

யார் சரி ? யார் சரியில்லை ? 

எப்போதுமே நீங்கள் நினைப்பது சரியாகவே இருக்கும் என நிரூபிப்பது அவசியமா ? - என்கிற இரண்டு நிலைகளில் 
ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அவசியம். பல சந்தர்ப்பங்களில் இரண்டும் ஒரே சமயத்தில் நடப்பதில்லை. நம்முடைய 
அளவுகோல்களை வைத்துக் கொண்டு மற்றவர்களைத் திருத்துகின்ற வேலையில் நாம் ஈடுபட வேண்டிய
அவசியமில்லை. மற்றவர்கள் அபிப்ராயங்கள் நம்மைப் பாதிக்காதவரை அதை மறுக்க வேண்டிய அவசியமில்லை.
அந்த நிலை மற்றவர்களுக்கு சந்தோஷத்தை அளிக்குமானால், அதைக் கெடுக்காமல் அந்த சந்தோஷத்தில் நாமும் 
பங்கு பெறலாம். 

விரும்புவது கிடைக்காவிட்டால்..

நாம் விரும்பியது கிடைக்காமல் போகும் சந்தர்ப்பங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக அதையே நினைத்துக்
கொண்டு வாழ்க்கையை வீணாக்கி விடவும் முடியாது. எது கிடைக்கிறதோ, அதை விரும்ப கற்றுக்  கொள்ள 
வேண்டும். விரும்புகின்றபடியே எல்லாம் நடக்காது என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு நமக்குக் கிடைத்ததை 
விரும்புகின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் வாழ்க்கை இலகுவாகி விடும். 

பிறர் விஷயத்தில் பொறுமை..

நாம் விரும்புகின்ற விஷயங்களே நம்மைச் சுற்றி நிகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு நமக்கு என்ன உரிமை
இருக்கிறது ? இருப்பதை அல்லது நடப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டால் பொறுமையினை இழக்க வேண்டிய 
அவசியமே இருக்காது. சுலபத்தில் கோபப்படுகிறோம், வெறுப்படைகிறோம். இது தேவைதானா என்று சில வினாடிகள்
யோசித்துப் பார்த்தால், எவ்வளவு அற்பமான காரியங்களுக்கெல்லாம் நாம் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறோம் என்பது
புரியும்.பொறுமை இல்லாமல் போனால் வாழ்க்கையே ஏமாற்றம் நிறைந்ததாகி விடும். 

மற்றவர்களின் செயல்களைக் கண்டு பொறுமை இழக்காதீர்கள். அவர்கள் செய்வது அறியாமையின் விளைவு என்று
நீங்கள் நினைத்தால், பொறுமை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது. 

எங்கே இருக்கிறது திருப்தி ? 

""திருப்தி என்பது என்ன ? பணத்தால் திருப்தி ஏற்பட்டு விடுமா...? பத்தாயிரம் ரூபாய் கையிலிருந்தால், இருபதாயிரம்
ரூபாய் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். ஒரு வீடு சொந்தமாக இருந்தால், இன்னொரு வீடு எப்போது 
வாங்கலாம் என்கிற ஆசை பிறக்கும். இல்லாவிட்டால் இந்த வீட்டை மேலும் விரிவுபடுத்தலாம் என்கிற ஆசை 
பிறக்கும். எல்லா வசதிகளுமே இப்படித்தான். திருப்தி என்பது தொடுவானம் போன்றது. நெருங்க நெருங்க தூர
விலகிச் சென்று கொண்டே இருக்கும். 

மற்றவர்களைத் திருத்துவதா ? 

ஒவ்வொருவரையும் திருத்திக் கொண்டிருப்பது நம்முடைய வேலை அல்ல. அது சாத்தியமுமில்லை. நம்முடைய

நேரம்தான் வீணாகும். நம்முடைய குறைபாடுகளே நிறைய இருக்கும்போது, அவற்றை திருத்திக்கொள்ள 

முயற்சிக்காமல் மற்றவர்களை விமர்சிப்பது வீண்வேலை. 


Wednesday, April 29, 2009

மைதா கேக்

தேவையானவை :
மைதா மாவு - அரை ஆழாக்கு(200 கிராம்ஸ்)
சீனி - முக்கால் ஆழாக்கு (300 கிராம்ஸ்)
நெய் - 2 கரண்டி

செய்முறை :
ஒரு வாணலியில் நெய்யை விட்டு நன்கு காய்ந்தவுடன் மைதா மாவைக் கொட்டி, கட்டியில்லாமல் கிளறி 2-3 நிமடங்கள் கழித்து தயிர் போன்ற பதம் வந்தவுடன்கீழே இறக்க வேண்டும். சர்க்கரையை ஒரு கரண்டி ஜலம் விட்டு பாகு வைத்துக்கொள்ளவும். கம்பிப் பதத்தில் இறக்கி வைத்து விடவும். அடுப்பில் வைத்து கிளறவேண்டாம். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக கிளறிவைத்த மாவைச் சேர்க்கவும். பிறகு வில்லைப் போடவும்.

ரவை சீடை

தேவையானவை:
பம்பாய் ரவை (சூஜி) - 1 ஆழாக்கு
உளுத்தம் மாவு - 2 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு, ஜீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
நெய் () வெண்ணை - 1 ஸ்பூன்

செய்முறை:
வாணலியை அடுப்பில் காயவைத்து, நன்கு காய்ந்தவுடன் எண்ணெய் எதுவும் விடாமல், ரவையைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும். ஆறிய பிறகு ரவையுடன் உளுத்தம் மாவு, மிளகு, ஜீரகப் பொடி, உப்பு, தேங்காய்த் துருவல், நெய் ( ) வெண்ணை சேருது சிறிது ஜலம்விட்டு கெட்டியாகப் பிசைந்து சிறிது சிறிதாக உருட்டி எண்ணெயில் போட்டுப்
பொன்னிறமாக ஆனதும் எடுக்கவும். இதே போன்று மிட மாவிலும் இதே அளவு சாமான்களைக் கொண்டு சீடை செய்யலாம்.

ஈஸி தேங்காய் பர்ப்பி


தேவையானப் பொருட்கள்:
கொப்பரைத் துருவல் - 2 கப்
பால் பவுடர் - 1 கப்
ஏலக்காய்த் தூள் -1/2 டீஸ்பூன்
கண்டன்ஸ்டு மில்க் - 1/4 கப்
ஐசிங் சுகர் - சிறிதளவு

செய்முறை:
கொப்பரைத் துருவல், பால் பவுடர், ஏலக்காய்த் தூள் மூன்றையும் நன்கு கலந்துகண்டன்ஸ்டு மில்க் விட்டு கெட்டியாகப் பிசையவும்(பூரி மாவு பதத்திற்கு). இதைநெய் தடவிய தட்டில் சமப்படுத்தி, மேலே ஐசிங் சுகரைத் தூவவும். 20 நிமிடம் கழித்து நன்றாக செட் ஆனதும் தூண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

Monday, February 9, 2009

நல்லவை சில ...

கண்களை நம்பாதே என்கிறார்கள். ஓர் உதாரணத்துடன் விளக்க முடியுமா?

பேரரசர் ஷிரெனிக்கும் அவரது ராணி செலினாவும் உறங்கிக் கொண்டிருந்தனர். அது மழைக்காலம்... கடுமையான குளிர் மிகுந்திருந்தது. பேரரசர் ஆழ்ந்து உறங்கியபோது ராணியின் வாயிலிருந்து, ''அவர் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்?'' என்ற வார்த்தைகள் வந்தன.

பேரரசர் விழித்தார். இந்த வார்த்தைகளைக் கேட்ட அவரது உடலும், ஆவியும் கொதித்தது. அவர் இதுநாள் வரை தனது ராணியின் உயரிய பண்பைப் பற்றிப் பெருமை கொண்டிருந்தார். 'இப்போது ராணி யாரைப் பற்றிப் பேசுகிறார்? அவளுக்கு ரகசிய காதலர் உண்டா? ஓ கடவுளே!' அவர் மனம் பெரும் கொந்தளிப்பில் இருந்தது. ராணி மீதே அவநம்பிக்கை எழுந்தது. காலையில் கோப நிலையில் அரண்மனையில் பொறுப்பான நபரை, ''இந்த அரண்மனையை எந்தத் தாமதமும் இன்றி கொளுத்திவிடு! நான் பகவான் மகாவீரரைப் பார்க்கச் செல்கிறேன்'' என்று புறப்பட்டுப் போனார். பேரரசரின் கட்டளையைக் கேட்டு அதிர்ந்து போனார் பொறுப்பான நபர்.

பேரரசர் ஷிரெனிக், பகவான் மகாவீரரைச் சந்திக்கும் இடத்துக்குச் சென்றார். பகவான் மகாவீரர் அன்றைய பிரசங்கத்தில் கற்பும், பற்றுறுதியும் மிக்க பெண்கள் பற்றிப் பேசினார். தமது பிரசங்கத்தின் இடையில், ''ராணி செலினா கற்பும் பற்றுறுதியுமிக்க பெண்களில் முதன்மையானவர்'' என்று குறிப்பிட்டார். பேரரசரால் நம்ப முடியவில்லை.

இதன்பின் மகாவீரரிடம் நேற்று இரவு நடந்ததைச் சொன்னார் பேரரசர். அதற்கு பகவான் மகாவீரர் சொன்னார்: ''ராணி செலினா நேற்று மாலை தனது வந்தனத்தைத் தெரிவிக்க இங்கு வந்தார். திரும்பும் வழியில் மரத்தினடியில் நின்றவாறு தியானம் செய்த சமணத் துறவியைக் கண்டார். அவர் ஆடையின்றி இருந்தார். அப்போது மிகவும் கடுமையான குளிராக இருந்தது. ராணி அங்கே நிற்கவில்லை. வணங்கிவிட்டு, அவர் தன் வழியே சென்றுவிட்டார்.

ராணி இரவில் தூங்கும்போது அவரது ஒரு கை, கம்பளிப் போர்வைக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. ராணியின் கை உயிரற்றதுபோல மரத்துப் போயிருக்கிறது. 'ஓ, எனது ஒரு கரம் சிறிது நேரம் கடும் குளிரில் ஏறக்குறைய உயிரிழந்து விட்டது. ஆடைகளின்று திறந்தவெளியில் தியானம் செய்யும் துறவியைப் போற்றுகிறேன். அவர் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார் என வியக்கிறேன்' என்று புலம்பி இருக்கிறார்'' என்றார் மகாவீரர்.

இதைக் கேட்டதும் பேரரசர் மதிமயங்கி திகைத்து நின்றார். அவர் உடனே விடைபெற்றுப் புறப்பட்டார். வழியில், அரண்மனைக்குத் தீவைக்குமாறு தான் கட்டளை இட்ட நபரைச் சந்தித்துப் பதற்றத்துடன் அவர் விசாரித்தார். ''என்னுடைய கட்டளையை நிறைவேற்றினாயா?''

''ஆம் பேரரசரே...'' என்றான். பேரரசர் சொன்னார், ''அன்பரே... மாபெரும் அநீதி நிகழ்ந்து விட்டது.''

''நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார் அந்த நபர். பேரரசர் முழுக் கதையையும் சொன்னார். அதன் பின் அவர் சொன்னார்: ''நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் ஆணைப்படி நெருப்பை மூட்டி விட்டிருக்கிறேன். ஆனால் அந்த நெருப்பு அரண்மனையை அடைய ஒரு நாள் ஆகும்.'' பேரரசர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

நமது கண்களும், காதுகளும் கூட நம்மை ஏமாற்றும் வலிமை உடையவை. தீர்க்கமாக ஆராய்ந்து அவசரப்படாமல் முடிவெடுத்தல் அவசியம்.

-------------------------------------

குழந்தைகளை மிகச் சின்ன வயதிலேயே பள்ளிக்கூடம் அனுப்புகிறார்களே... இது சரியா?

ல்வி கற்பது வேறு. பள்ளிக்கு அனுப்புவது வேறு. இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு நம் பெற்றோருக்குப் புரியவில்லை. ஏழு வயதுக்குள் மூளை உள் வாங்கும் விஷயங்கள்தான் வாழ்வின் பெரும்பாலான காலத்துக்குப் பயன்படுவது. எழுபது சதவிகிதச் செய்திகள் அதற்குள் பதிவாகி விடுகின்றன. எஞ்சிய ஆயுள் முழுவதும் மிச்சத்தைத்தான் அவை கற்கின்றன. ஜப்பானில் ஏழு வயது வரை வீட்டில் நிறைய கற்றுத் தந்து, பின்னர் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்று ஒருமுறை படித்தேன். இப்போது கர்ப்பத்திலேயே குழந்தையோடு பேசச் சொல்கிறார்கள். தான் தியானம் பழகி குழந்தைக்கும் (கர்ப்பத்தில்) தியான உணர்வை ஏற்படுத்த முடியும் என்கிறார்கள்.

ஒரு ஞானியைச் சந்தித்த பெண்மணி தன் குழந்தையைக் காட்டி, ''ஐயா... இவனுக்குக் கல்வியை எந்த வயதில் இருந்து தொடங்கலாம்?'' என்று கேட்டார். ஞானியோ, ''குழந்தைக்கு எத்தனை வயது?'' என்று பதில் கேள்வி கேட்டார்.

''மூன்று வயது'' என்றாள் தாய். ஞானியோ, ''ஆஹா... மூன்று வருடங்களை வீணாக்கி விட்டீர்களே... கல்வியில் இவன் மூன்று வருடங்கள் பின்தங்கி விட்டானே'' என்று கவலைப்பட்டாராம். அதாவது உயர்ந்த சிறந்த வாழ்வியல் உண்மைகளைக் கற்க வயதெல்லை கிடையாது.

-------------------------------------
இன்றைய இளைஞர்கள் பெற்றோரை எதிர்த்துப் பேசுகின்றனரே... என்ன செய்வது?

ரசிக்கலாம்; பாராட்டலாம்; பலபேரிடம் சொல்லிச் சொல்லி மகிழலாம். நாம் கூட, நம் அப்பா- அம்மாவை எதிர்த்துப் பேசவே நினைத்தோம். பயத்தால், போலியாக அடக்கிக் கொண்டு மரியாதை காட்டுவது போல் நடித்தோம்.

இன்றைய பிள்ளைகள் கோழைகளாக இல்லை; உண்மையாக இருக்கிறார்கள்! பெற்றோரை எதிர்க்க நினைத்த நமது எண்ணங்களே... நம் வழியே பிள்ளைகளுக்கும் சென்று செயலாக வெளிப்படுகிறது. எனவே, அவர்களை எப்படி நோக முடியும்?

ஒரு சம்பவம்...

அப்பா: 'என்னடா படிக்கிற நீயெல்லாம்? உலகத்தை முதன் முதல்ல சுத்தி வந்தவர் யாருன்னு கேட்டா பதில் சொல்லத் தெரியலியே?

மகன்: என்னை மட்டும் ஊரைச் சுத்திட்டு வர்றேன்னு திட்டுங்க. உலகத்தைச் சுத்திட்டு வந்தவனைப் புகழ்ங்க. உலகத்தைச் சுத்தறவனை விட, ஊரைச் சுத்தறவன் நல்லவன் இல்லியா?

_ இப்படிப் பேசும் மகனை வெறுக்கவா முடியும்? ரசியுங்கள் சார்! மனதார பாராட்டுங்கள். இளைஞர்களுக்கு நம் மீது நட்பும் நம்பிக்கையும் வந்தால்தான் இளைஞர்களை, சரியான பாதையில் செலுத்த முடியும் என்கிற ரகசியத்தைக் கற்றுக் கொள்ளுங்கள் சார்!

------------------------------------------------------------------------------------------------

மருத்துவர்களாகிய எங்களது பேச்சைக் கேட்காமல், தங்களது கருத்திலேயே பிடிவாதமாக நிற்கும் நோயாளிகளின் பேச்சைக் கேட்கும்போது எரிச்சல் வருகிறது. என்ன செய்யலாம்?

நகைச்சுவை உணர்வுடன் வாழப் பழக வேண்டும். சிரிக்கத் தெரிய வேண்டும். அண்மையில் கண் மருத்துவரைப் பார்க்கப் போயிருந்தேன்.

அங்கு நோயாளி ஒருவர், ''டாக்டர் டி.வி. பாக்காம இருக்க முடியலை. கண்ணும் கெடக் கூடாது... டி.வி- யும் பாக்கணும். வழி சொல்லுங்க" என்று மல்லுக்கு நின்றார்.

துளிக்கூட டென்ஷன் ஆகாமல் டாக்டர் சொன்னார்...

''அருமையான வழி இருக்கு. டி.வி-யை ஆஃப் பண்ணிட்டுப் பாருங்க... 24 மணி நேரம் பார்த்தாலும் கண்ணும் கெடாது; டி.வி-யும் ரிப்பேர் ஆகாது" என்றார். இப்படி ஜோக் அடிக்க நீங்களும் பழகிக்கோங்க டாக்டர்... டென்ஷன் இருக்காது.

நான், யாரிடம் பேசினாலும் சண்டையில் போய் முடிகிறது! நியாயத்தைதான் சொல்கிறேன்... எனினும் எவருக்கும் என்னைப் பிடிக்கவில்லை! என்ன செய்வது?

வருடன் பேசுவதாக இருந்தாலும்... 'வாருங்கள் கலந்து பேசுவோம்' என்று உரையாடலுக்குத் தயாராகுங்கள். எதிர் தரப்பினரின் நியாயத்தையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்! 'உரையாடல் என்பது இருவழிப் பாதை; எதிர்ப் பக்கத்தில் இருந்தும் பயணம் அனுமதிக்கப்படுகிறது' என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

மாறாக, விவாதத்துக்கு அழைப்பு விடாதீர்கள். அது சண்டையில் முடியலாம். உரையாடல்- நட்புக்கு வழி வகுக்கும். விவாதம்- பகைமைக்கு வாசல் திறக்கும்!

-----------------------------------------------------------------------------------------------

உங்களை ஆச்சரியப்படுத்தும் விஷயம்?

க்கத்து வீட்டுக்காரன் நாள்தோறும் தன் வீட்டுக் குப்பைகளை, உங்கள் வீட்டின் முன் போட்டால் பொறுத்துக் கொள்வீர்களா? கோபப்படுவீர்கள்; அவனுடன் சண்டைக்குப் போவீர்கள்! ஆனால், அதே பக்கத்து வீட்டுக்காரன் நாள்தோறும் நம்மைச் சந்தித்து, நடிகர்- நடிகைகளின் அந்தரங்கம், ஊர்க் கதை மற்றும் அரசியல் கிசுகிசுக்களைப் பற்றிப் பேசும்போது அருவருப்பு அடைகிறோமா? இல்லை!அவர் என்ன செய்கிறார்? நம் மனதில் குப்பை கொட்டுகிறார். வீட்டில் குப்பை கொட்டினால் கோபப்படும் நாம், மனதில் குப்பை கொட்டுவதை வரவேற்கலாமா?

மனதில் குப்பை கொட்டும் நபரை வரவேற்கக் காத்திருக்கி றோம். வராவிட்டால் ஏங்குகிறோம். கட்டடங்களைக் குப்பை ஆக்குபவர்களைக் கடுமையாக எதிர்க்கும் நாம், மனதைக் குப்பையாக்குபவர்களை விரும்புவது ஏன்?

என்னை ஆச்சரியப்படுத்தும் விஷயம் இதுதான்!

-------------------------------------

வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய விரும்புகிறேன். சுருக்கமாக ஓர் யோசனை சொல்லுங்களேன்...

னியாக இருக்கும்போது உங்களது எண்ணங்களில் கவனமாக இருங்கள்.

உங்களுடன் மற்றொருவரும் இருக்கும் நேரத்தில் எண்ணம் தவிர சொற்களிலும் கவனமாக இருங்கள்.பலரோடு சேர்ந்து இருக்கும் தருணத்தில்... எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் கவனமாக இருக்க வேண்டும். இதைக் கடைப்பிடித்தால் உயர்வு நிச்சயம்!

----------------------------------------------------------------------------------------------

என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன. தப்பிக்க வழி சொல்லுங் களேன்?

ந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை.

அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார்.மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது. நாய்களோ வெறித் தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் ஓஷோ அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.

ஓஷோவை எழுப்பிய அமைச்சர், ''என்ன மனிதர் நீங்கள்... இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?'' என்று புலம்பினார்.

ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்: ''அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை; கோஷமிடவில்லை! பாவம், அந்த நாய்களுக்கு... இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவை, பத்திரிகை படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்!'' என்றார்.

''நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்?'' என்றார் அமைச்சர்.

உடனே ஓஷோ, ''நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள். அப்படிப் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல... உங்கள் எதிர்ப்பு உணர்வு. நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்; இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால்தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை.

நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை. ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான்!

நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன... பார்த்தீர்களா? ஏற்பு உணர்ச்சியுடன் கவனித் தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்!'' என்றார் ஓஷோ.

'உதவாக்கரை யோசனை!' என்று மனதுக்குள் பழித்தபடி போனார் மந்திரி. ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து ஓஷோவைச் சந்தித்தார் அமைச்சர்!

''ஆச்சரியம்தான்! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித் தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்'' என்றார் அமைச்சர்.

ஓஷோ நமக்குச் சொல்கிறார்: ''இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் முகத்தை உள்முகமாகத் திருப்பு. எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய். உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும். அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய். அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம். உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்.

உங்களது கேள்விக்கு, ஓஷோவே பதில் சொல்லி விட்டார். என் மீது எரிச்சல் எதுவும் இல்லையே!

------------------------------------------------------------------------------------------------

எண்ணற்ற திறமைகள் இருந்தும் உலகமே எனக்கு எதிராக இருப்பது போல் உணர்கிறேன். இதைத் தவிர்க்க என்ன வழி?

ங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் ஆர்தர்கார்டன் எழுதிய ஒரு வாக்கியம்:

'சிறு மெழுகுவத்தியின் வெளிச்சத்தைக்கூட மறைக்கும்
இருட்டு, இந்த உலகத்தில் இல்லவே இல்லை!'

நீங்கள் எரியும் மெழுகுவத்தியாக இருந்தால், எந்த இருட்டும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது!

-------------------------------------

நான் ஓர் ஆசிரியர். இன்றைய மாணவர்கள் பலர் படிப்பில் ஆர்வமே காட்டுவதில்லை... எப்படி பாடம் நடத்துவது?

பாடம் தவிரவும் பல விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். மாணவர்களுக்குச் சுவையாகவும் கற்பனையாகவும் விதவிதமான முறையில் பாடம் நடத்த வேண்டும்.

எங்கள் ஆங்கில ஆசிரியர் ஒருவர் அவரது பாட வேளையில், வார்த்தை விளையாட்டு நடத்துவார். ஒருமுறை எங்கள் வகுப்பில், 'ABCD இந்த எழுத்துகள் இடம்பெறாத நூறு ஆங்கில வார்த்தைகளைச் சொல்ல முடியுமா?' என்று கேட்டார்.

நாங்கள் தடுமாறினோம். முடிவில்... ''நீங்களே சொல்லுங்கள் சார்'' என்று அவரிடமே கேட்டோம்.

''நீங்கள் நூறு எண்ணுவதற்குள் நான் சொல்லி விடுவேன்!'' என்று சவால் விட்டவர், 'ஒன், டூ, த்ரீ...' என்று வரிசையாகச் சொல்லச் சொன்னார். 99 வரும் வரை பேசாமல் இருந்தவர், Ninty Nine-என்று நாங்கள் சொன்னதும், 'Stop' என்றார்.

பிறகு, ''Stop என்ற வார்த்தையுடன் சேர்த்து நூறு வார்த்தைகள் ABCD வராமல் சொல்லி விட்டேன்... பார்த்தீர்களா!'' என்று திகைக்க வைத்தார். உண்மைதான்! 1 முதல் 99 வரை ஆங்கிலத்தில் சொல்லும்போது ABCD எதிலுமே வராது. அவரது வகுப்பு என்றாலே ஆசையாகக் காத்திருப்போம். இப்படி நீங்களும் ஏதாவது ஓர் யுக்தியை தினம் தினம் கையாள வேண்டும்.

திருமதி. ஒய்.ஜி.பி. மிகச் சிறந்த பள்ளிகளின் நிர்வாகி; கல்வித் துறை நிபுணர். ஒருமுறை அவர் சொன்னார்: ''ஷேக்ஸ்பியர் நாடகம் பாடம் நடத்தினோம். பசங்க ஆர்வமா இல்லை. கவனமா படிக்கலை. உடனே, 'இந்த டிராமாவை தமிழில் சினிமாவா எடுத்தா, எந்தெந்த வேடத்துக்கு யார் யாரை நடிகரா போடலாம்... ஏன்? அவர்களுக்கும் அந்தப் பாத்திரத்துக்கும் எப்படி பொருத்தம்?'னு எழுதச் சொல்லி அசைன்மெண்ட் கொடுத்தோம். பிள்ளைகள் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்தார்கள். பாடமும் சுபமாக நடத்தப்பட்டது!'' _ இது நல்ல யுக்திதானே!

-------------------------------------

உன்முன் தலை குனிந்தேன் - அதனால்,
பலர்முன் தலை நிமிர்ந்தேன்.
நன்றி புத்தகமே நன்றி.

-------------------------------------

பல பேர், அடிக்கடி சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்களே... என்ன காரணம்?

அவன் ஒரு பைத்தியம். பாதாளச் சாக்கடையின் மூடியின் மீது நின்றபடி, ''ஐம்பத்திநான்கு... ஐம்பத்திநான்கு'' என்றபடி குதித்துக் கொண்டிருந்தான்.

அந்த வழியாக வந்த மனிதர் ஒருவருக்கு, இவனது செய்கை வேடிக்கையாகத் தோன்றியது. மெள்ள அருகில் சென்றவர், ''அது என்ன... ஐம்பத்து நான்கு ஐம்பத்துநான்குன்னு சொல்லிக்கிட்டே குதிக்கிறே?'' எனக் கேட்டார்.

''அதைப் பத்திச் சொல்லணும்னா... நீங்களும் இந்த மூடி மேல் ஏறி குதிக்கணும்!'' என்றது பைத்தியம்.

இவன் பைத்தியம் என்பது தெரியாத அந்த ஆசாமியும் ஆர்வத்துடன் மூடியின் மேல் ஏறி நின்றார். அவ்வளவுதான்! 'லபக்'கென்று மூடியை உருவியது பைத்தியம். பாவம்... அந்த மனிதர் நிலைகுலைந்து பாதாள சாக்கடைக்குள் விழுந்தார்.

பிறகு, சாவதானமாக மூடியைப் போட்டு மூடி விட்டு, அதன் மீது ஏறி நின்ற பைத்தியம், ''ஐம்பத்தி ஐந்து... ஆஹா... ஐம்பத்தி ஐந்து'' என்று குதிக்க ஆரம்பித்தது!

அளவுக்கு அதிகமான ஆர்வத்தால் தூண்டப்பட்டு, தனக்குச் சம்பந்தமே இல்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பவர்கள் அதிக சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள். 'எவன் எவ்வளவு கத்தினால் என்ன?' என்று விழிப்பு உணர்வுடன் கடந்து போகிறவர்கள், சிக்கல்களைக் கடந்து விடுகிறார்கள்.

-------------------------------------

இந்தியாவில் விவாகரத்து அதிகமாகி வருகிறதே... சென்ற தலைமுறை இப்படியா இருந்தது?

அண்மையில் இளைஞர் ஒருவர் என்னை சந்தித்தார். முப்பது வயதாகியும் தமக்குத் திருமணம் ஆகவில்லை என்றும், பார்க்கும் பெண்களை எல்லாம் தன் தாயார் நிராகரிப்பதாகவும் கூறி வருந்தினார்; வெவ்வேறு குற்றம்- குறைகள் சொல்வதாக வேதனைப்பட்டார்.

''இந்தப் பிரச்னை தீருவதற்கு ஒரே வழி... உங்கள் அம்மாவைப் போன்ற ஒரு பெண்ணை நீங்கள் தேர்ந்தெடுப்பதுதான். தோற்றம், நடை- உடை பாவனை, நிறம், சமையல் உட்பட எல்லா விஷயங்களிலும் உங்களின் அம்மாவை மாதிரியே உள்ள ஒரு பெண்ணை, அம்மா வழி உறவிலிருந்தே தேர்ந்தெடுங்கள். உங்கள் அம்மா இசையக் கூடும்'' என்றேன்.

இரண்டே மாதத்தில் வெகு குஷியாக வந்த இளைஞர், ''அச்சு அசல் அம்மா மாதிரியே இருக்கிற பெண் கிடைத்து விட்டாள்.
அம்மாவும் இணங்கி விட்டார். விரைவில் நிச்சயதார்த்தம்!'' என்று பூரித்தார்.

ஆனால் அது நிறைவேறவில்லை என்று சில நாட்கள் கழித்து எனக்குத் தகவல் கிடைத்தது. மீண்டும் அந்த இளைஞனைச் சந்தித்தபோது, 'காரணம் என்ன?' எனக் கேட்டேன்.

'அவள் உன் அம்மா மாதிரியே இருக்கிறாள். முப்பதாண்டுகளாக உன் அம்மாவோடு நான் பட்ட அவஸ்தை போதாதா? உன்னை அப்படியரு ஆபத்தில் சிக்க விட மாட்டேன்!' என்று அவனின் அப்பா மறுத்து விட்டதாகக் கூறினான்.

சென்ற தலைமுறையில் எரிமலை புகைந்தது. இந்தத் தலை முறையில் எரிமலை வெடிக்கிறது!

-------------------------------------